Friday, March 23, 2012

சில்ரென் ஆப் ஹெவென் (1997)


ரகசியம் என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இயல்பான ஒன்று. இதில் வயது வளர்ந்த நம்முள் இருக்கும் ரகசியத்தையே நாம் முதன்மையாக நினைக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்கும் ரகசியங்கள்
உண்டு என்பதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடுவதை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஏதோ உடன்பிறந்தவர்களிடம் பேசுவதை போல அக்குழந்தைகள் பொம்மைகளுடன் பேசுவதை பலமுறை நம்மால் காணக்கூடும். பார்க்கும் நமக்கு சிரிப்பாக தோணலாம். ஆனால் குழந்தைகளுக்கு அந்த பொம்மைகளுடன் நாம் எதிர்பாராத அளவில் ஒரு வித அன்யோன்யம் அடங்கியிருக்கும் என்பது பெரியவர்களாகிய நம்மால் உணர முடியாத ஒரு ரகசிய உண்மை. நம்மிடம் பகிர முடியாத ரகசியங்களை கூட அந்த போம்மைகளிடம் குழந்தைகள் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி தனக்கென ஒரு ரகசிய உலகத்தையே உள்ளுக்குள் உருவாக்கிக்கொள்ளும் மனநிலை உடையவர்கள் அந்த பிஞ்சுகள். அப்படிப்பட்ட அந்த அபூர்வ உலகத்தையும் அவர்களின் ரகசியத்தையும் மட்டுமே முன்னிறுத்தி சித்தரிக்கும் ஈரானிய படம்தான் 1997ல் வெளிவந்த "சில்ரென் ஆப் ஹெவென்" ( Children of Heaven).

தோட்ட வேலை செய்யும் அப்பா, உடல்நல குறைவுடன் வீட்டை கவனித்து கொள்ளும் அம்மா என ஒரு ஏழ்மையான குடும்பச்சூழ்நிலையில் வளரும் அண்ணன் தங்கையான அலி மற்றும் சாரா தான் கதையின் நாயகர்கள். தங்கையின் கிழிந்த காலணிகளை தைத்து செரி செய்து வரும் அண்ணன் அலி, ஒரு காய்கறி கடையருகில் அதை தவற விடுகிறான். எங்கு தேடியும் கிடைக்காத ஏமாற்றத்தில் தங்கை சாராவிடம் தொலைத்ததை ரகசியமாக எடுத்துச்சொல்கிறான். பள்ளிக்கு காலணிகள் இல்லாமல் சென்றால் ஆசிரியை அடிப்பார்கள் என்றும், தனக்கு தன் காலணிகள் இப்போதே வேண்டும் என்றும் அழுகிறாள் சாரா. வீட்டுநிலைமையும், அப்பா அன்றாடம் தோட்ட வேலை செய்ய வீடு வீடாக அலைவதையும் கருத்தில் கொண்டு, காலணிகள் தொலைந்த விஷயத்தை பெற்றோர்களிடம் சொல்லவேண்டாமென்றும், தன்னுடைய காலணிகளை அணிந்துகொண்டு பள்ளிக்குச்செல்லுமாறும், அவள் வந்தபிறகு காலணிகளை மாற்றிக்கொண்டு தான் செல்வதாகவும் அலி சாராவிடம் சொல்கிறான். எப்படியோ சாராவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அதையே தினமும் கடைபிடிக்கின்றனர் அண்ணனும் தங்கையும். வீட்டில் இந்த விஷயத்தை மறைப்பதில் மட்டுமே அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனால் அதையும் மீறி எதிர்பாராத பல இடையூறுகளை சந்திக்கின்றனர் அலியும் சாராவும். காலை முதல் மதியம் வரை காலணிகளை அணிந்து செல்லும் சாரா, மதியம் ஒரு தெருவோர சந்துக்குள் காலை முதல் காத்திருக்கும் அண்ணன் அலிக்கு காலனிகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்கிறாள். இதனால் தினமும் பள்ளிக்கு மிகத்தாமதமாக செல்லும் அலி ஆசிரியரின் திட்டுதலுக்கும் கண்டிப்புக்கும் ஆளாகிறான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பித்தாலும், ஒரு நாள் கண்டுங்கோபமான ஆசிரியர் அவனை வீட்டிற்கு திருப்பி அனுப்புகிறார். ஆனால் அந்த நேரத்தில் அவனின் வகுப்பாசிரியர் அங்கு வந்து அவன் நன்கு படிக்கும் மாணவனென்றும் சில பல இடைஞ்சல்களால் தமதமாகிறதென்றும் அவனுக்கு ஆதரவாக பேசி காப்பாற்றுகிறார்.

இதற்கிடையில் காலை பள்ளிக்கு செல்லும் சாரா சந்திக்கும் பிரச்சனைகள் வேறு விதமானவை. அண்ணனின் காலணிகள் பெரிதாக இருப்பதால் சாராவின் கால்களுக்கு கொஞ்சம் இருக்கமற்றே பொருந்துகிறது. இதனால் கொஞ்சம் தேய்த்து தேய்த்தே நடக்கவேண்டியிருக்கிறது சாராவுக்கு. இப்படியிருக்க அவள் நடந்து வரும் பாதையின் ஓரத்தில் ஒரு அகழியில்(ditch) ஒரு காலனி கழண்டு விழுந்து நீரோடையில் அடித்து செல்லப்படுகிறது. அது ஓடும் வேகத்திற்கு அதை விடாப்பிடியாக துரத்தும் சாரா ஒரு கடைகாரரின் உதவியுடன் அதை ஒரு வழியாக பிடித்து எடுக்கிறாள். பின்னொரு நாள் பள்ளியில், அவளின் தொலைந்த காலணிகளை போலவே ஒரு மாணவி அணிந்திருப்பதை பார்க்கிறாள் சாரா. அந்த மாணவியின் வீடு எங்கிருக்கிறது என்று மறைமுகமாக பின்தொடர்ந்து சென்று கண்டு பிடிக்கிறாள். பின்பு அண்ணன் அலியை அழைத்து சென்று அந்த சிறுமியிடம் இருந்த காலணிகளை வாங்க அந்த வீட்டோரத்தின் மறைவில் காத்திருக்கின்றனர். கதவு திறக்க, வெளியில் வரும் அந்த சிறுமியை பார்த்ததும் அவர்களுக்கே ஒரு பரிதாப உணர்வு வருகிறது. அந்த சிறுமியின் தந்தை கண்ணிழந்த ஒரு குருட்டு வியாபாரி. இப்படி இருப்பவர்களிடம் சென்று காலணிக்காக வாதாட மனமில்லாமல் திரும்புகிறார்கள்.

இப்படியே செல்ல, இதற்க்கு ஒரு விடிவு காலமாய் அலிக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. சிறுவர்களுக்கான நெடுந்தூர ஓட்டபந்தயம் நடக்கவிருப்பதாகவும், மூன்றாம் பரிசாக ஒரு ஜோடி காலணிகள் தருவதாக தகவல் பலகையில் குறிப்பிட்டிருப்பதை பார்க்கும் அலி, போட்டியில் கலந்து கொள்கிறான். அவனது ஒரே நோக்கம் மூன்றாம் இடத்தை பெறவேண்டும் என்பதே. ஆனால் போட்டியில் தோற்க்ககூடாதென்றும், குறிப்பாக மூன்றாம் இடத்தையே பிடிக்கவேண்டுமென்றும், தங்கைக்காக காலணிகளை வென்றே தீரவேண்டும் என்ற வெறியிடனும் ஓடும் அலி இறுதியில் பிடிப்பது அவனே எதிர்பாரக்காத முதலாம் இடம். அவன் மேற்கொண்ட ஓட்ட வேகத்தை அவனாலேயே கட்டுபடுத்த முடியாமல் முதலிடத்தை பிடித்து விடுகிறான். ஆசிரியர்களும், சகமாணவர்களும் அலியை பாராட்டி கொண்டாட, போட்டியில் தோற்றதை விட முதலிடத்திற்கு வந்தது பெரும் வலியாக தோன்றுகிறது அலிக்கு. அதற்கு காரணம் தங்கை சாராவுக்கு தன்னால் காலணிகளை பெற்றுத்தர முடியவில்லை என்ற ஒரே ஏமாற்றம். ஆனால் சமீப நாட்களாக நன்கு தோட்ட வேலைகளை செய்து பணம் ஈட்டும் அப்பா சாராவுக்கு ஒரு ஜோடி புதிய காலணிகளை வாங்க தவறவில்லை. இது தெரியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வரும் அலி, அவன் ஓடிய வேகத்தில் கிழிந்து கந்தலான காலணிகளை கழட்டி விட்டு தொட்டி தண்ணீரில் கால்களை நனைக்க, அவன் ஓடியதால் ஏற்பட்ட வெடிப்பு புண்களை தண்ணீரில் இருக்கும் வண்ணமீன்கள் மென்மையாக கொத்தி தின்பதோடு படம் நிறைவடைகிறது.

காலணிகள் என்ற ஒற்றை கருவைக்கொண்டு படம் நெடுக விறுவிறுப்பு குறையாத வண்ணம் கொண்டு சென்ற விதத்தில் ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதியின் (Majid Majidi) ஆச்சர்யப்படுத்தும் தனித்தன்மையை நம்மால் உணர முடிகிறது. அதிலும் அந்த அண்ணன் தங்கையின் கதாபாத்திரங்களை உருவாகிய விதம்தான் எத்தனை அழகு. காலணிகளை தொலைத்துவிட்டு தங்கையிடம் தயங்கி தயங்கி சொல்வது, தாமதமாக பள்ளிக்கு வந்ததால் ஆசியிரடம் பாவமாக திட்டுவாங்குவது, எல்லாவற்றிற்கும் மேலாக இறுதிக்கட்டத்தில் ஓட்டபந்தய காட்சி, பிறகு முதல் பரிசு வாங்கியதற்கு தங்கையிடம் ஏமாற்றமாக கூனிக்குறுகி நிப்பது என அலி கதாபாத்திரத்தில் நடித்த அந்த சிறுவன் அபாரம்.

இதற்க்கு போட்டி போடும் விதமாக அண்ணனிடம் கோபித்துக்கொள்ளும் முறைப்பு, தன் காலணியை போலவே இன்னொரு சிறுமி வைத்திருப்பதை பார்த்ததும் குழப்பம் கலந்த கோபம், நீரோடையில் காலணிகளை தவறவிட்டுவிட்டு அதை பதற்றத்துடன் துரத்துவது என்று ஒவ்வொரு காட்சியிலும் பார்பவர்கள் மனதை கொள்ளைகொள்கிறது சாராவின் குழந்தைத்தனம். சாராவின் ஒவ்வொரு முகபாவனையையும் படம் பார்த்து முடித்த பின்னும் நம்மால் மறக்க இயலாது. பலகாட்சிகள் நம்மையும் ஒரு குழந்தையாக மாற்றிவிடுவது மறுக்க முடியாத உண்மை.பொதுவாகவே மஜீத் மஜிதியின் படங்கள் குழந்தைகளையும் அவர்களின் ரசனைமிக்க அன்றாட வாழ்க்கையையுமே மையமாக கொண்டு இருக்கும். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு 1999ல் வெளிவந்த "தி கலர் ஆப் பாராடைஸ்" ( The Color of Paradise). ஆனால் என்னைப்பொருத்த வரை "சில்ரென் ஆப் ஹெவென்"க்கு தான் முதலிடம் என்றே சொல்வேன். உலக சினிமா ரசிகர்களின் பிடித்த படங்களின் பட்டியலில் இந்த படம் நிச்சயம் இருக்கும் என்று எழுதியே கொடுக்கலாம்.

No comments:

Post a Comment