Wednesday, December 21, 2011

மெஹே தகா தாரா (1960)


பெண் பிள்ளையை பெற்றோர் அப்பிள்ளைக்காக அன்றாடம் உழைப்பது புதிதல்ல. அவர்களின் உழைப்பாலும் பாதுகாப்பாலும் அப்பெண் நல்ல முறையில் வளர்ந்து தனக்கென ஒரு எதிர்காலத்தை தேடிக்கொண்டு தாய் தந்தையை கவனித்து கொள்வதும் அவளின் ஒரு கடமையாக கருதப்படுகிறது. ஆனால் தாய், தந்தை, உடன்பிறந்தோர் என அனைவரும் அவ்வீட்டின் ஒரு பெண்ணின் உழைப்பையும், பிழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்தால் அப்பெண் எவ்வளவு உழைக்க நேரிடும்?. தன்னை எந்த அளவு வருத்திக்கொள்ள நேரிடும்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் சோகக்கதைதான் வங்காள படமான "மெஹே தகா தாரா".

நீத்தா அழகானவள், குணமானவள், பொறுமையும் அன்பும் கொண்டவள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனிக்கிறாள். அம்மா வீட்டு வேலையை கவனித்துக்கொள்ள, அப்பா அருகில் இருக்கும் ஒரு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி பின் உடல்நல குறைவால் அப்பணியை துறக்கிறார். தம்பி வேலை தேடிக்கொண்டிருக்க, தங்கை படிப்பை முடித்து தற்காலிகமாக வீட்டில் இருக்க, அண்ணன் ஒரு பாடகனாக வேண்டும் என்ற ஒரு கனவோடு திரிய, நீதாவின் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் நிலைக்கு வருகிறது அந்த குடும்பம். இதனை ஒரு சுமையாக எண்ணாமல் வேலை செய்து குடும்பத்திற்கு போதிய அளவு பணம் ஈட்டுகிறாள் நீத்தா. தம்பியும் தங்கை சுயநலமாக பணத்தை பிடுங்கி செலவழிக்கும் போதும், அண்ணன் நீத்தாவின் மீது மிகுந்த அன்போடு ஆறுதல் அளிக்கிறான். வீட்டில் அவளின் வலியையும் சுமையும் உணரும் ஒரே ஜீவன் அவள் அண்ணன் மட்டுமே. நீத்தாவுக்கு ஒரு காதலன் இருக்கிறான். சுமைகள் நிறைய இருந்தாலும் காதலனோடு இருக்க நேரத்தை ஒதுக்குவது மட்டுமே அவளுக்கு பெரிய ஆறுதல். காதலன் இவளை காண அடிக்கடி வீட்டிற்கு வந்துபோனாலும், நீத்தாவின் தங்கை அக்காவின் காதலன் மீது விருப்பம் கொள்கிறாள். இதை நீத்தா கண்டுகொள்ளாமல் குடும்பத்திக்காக உழைத்துவர, ஒரு கட்டத்தில் தன் காதல் தங்கையின் கை மாறியதை உணர்கிறாள். காதலன் கொஞ்சமும் யோசிக்காமல் இவளை தவிர்க்கிறான். இதனால் மனமுடைகிறாள் நீத்தா. ஆனால் அப்பொழுதும் தங்கைக்காக தன் காதலை தியாகம் செய்கிறாள்.

தொடர்ச்சியாக நீத்தாவின் வேலையும் பறிபோகிறது. தங்கை கணவரோடு தனியாக வாழ, தம்பிக்கு வெளியூரில் வேலைக்கிடைத்துவிட , அண்ணன் பாடகனாகும் கனவோடு வாய்ப்பை தேடி செல்ல, நீத்தா தனிமையாகிறாள். வேலையுமின்றி வீட்டில் இருக்கும் நீத்தா காசநோய்க்கு உள்ளாகிறாள். அத்தனை வருடங்களாக தான் பார்த்து வந்த தாய் தந்தையே நீத்தாவை சுமையாக பார்க்கின்றனர். வேதனையின் விளிம்பிற்கே செல்லும் அவள் வீட்டை விட்டே வெளியேறுகிறாள். சிலநாட்களுக்கு பிறகு பெரிய பாடகனாக வீடு திரும்பும் அண்ணன் நீத்தாவிற்கு ஏற்பட்ட நிலைமையை அறிந்து திகைக்கிறான். அவளை காசநோய் சிகிச்சையில் சேர்க்கிறான். பிறகு ஒரு மலைமேல் இருவரும் உட்கார்ந்து, தன் பால்ய ஞாபகங்களை நினைவுகூர படம் நிறைவடைகிறது.

குடும்பச்சுமையால் இளம்பெண்கள் எத்தகைய மனபோராட்டத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை "நீத்தா" காதபாத்திரத்தின் மூலம் பகிரங்கமாக போட்டு உடைத்திருக்கிறார் இயக்குனர் ரித்விக் கடக்(Ritwik Ghatak). அதில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்னென்னவேன்றால்
* சம்பளத்தை வீட்டிற்க்கு கொண்டு வர, வேலையேதும் இல்லாத தம்பியும் தங்கையும் கூச்சப்படாமல் பணத்தை பிடுங்கிச்செல்ல, அதை புன்சிரிப்புடன் நீத்தா சகித்துக்கொள்ளும் இடம்.
* தன் காதலன் தங்கையின் மாறியது அறிந்தும் தங்கையின் கல்யாணத்திற்கு நீத்தா வேலை செய்யும் இடம்.
* தன்னை விட்டு எல்லாம் போனதை காசநோயின் அவதியில் உணரும் நீத்தா அந்தநாள் வரை தன்னுள் அடக்கி வைத்திருந்த வேதனை வெளிப்பட உரக்க கத்தும் இடம்.
இப்படி பல இடங்கள் நடுத்தர பெண்ணின் மனபோராட்டமாக சித்தரித்திருப்பார் இயக்குனர்.
ஆனால் அதையும் தாண்டி பொதுவான கருத்தாக வேலைபார்க்கும் நடுத்தர பெண்களின் நிலையை கூறும் இடம் எதுவென்றால்
* படத்தின் ஆரம்பத்தில் நீத்தா வேலை முடிந்து நடந்து வருகையில் அவளின் கால் செருப்பு அந்துவிடுகிறது. அதை பார்க்கும் அவள் இரு செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு நடக்கிறாள். அந்த ஒரு இடத்திலேயே நீத்தாவின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் நம்மால் உணரமுடிகிறது. ஆனால் அதை தொடர்ச்சியாக காட்டும் வகையில், இறுதிக்காட்சியில் அண்ணன் தெருவில் இருக்கும் ஒரு கடையில் நிற்க, அவ்வழியே வரும் ஒரு பெண்ணின் செருப்பு அந்துவிடுகிறது. அதை பார்க்கும் அவள் இரு செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு நடக்கதுவங்குகிறாள். இதை காணும் நீத்தாவின் அண்ணனுக்கு கண்ணீருடன் தங்கையின் நினைவு வர, குடும்பத்தை தோளில் தாங்கும் நடுத்தர பெண்களின் நிலைதான் அது என்பதை படம் பார்க்கும் நமக்கு பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தி படத்தை முடிக்கிறார் இயக்குனர்.

படத்தை பற்றி கடக் " "மெஹே தகா தாரா" முதன் முதலில் எழுத்தாளர் ஷக்திபடா ராஜகுருவின்(Shaktipada Rajguru's) "சேனமுக்(Chenamukh)" என்ற கதையாக பிரபல பத்திரிக்கையில் வெளியானது. அதைபார்த்த எனக்கு அக்கதை ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது. அதன்மூலம் தான் நான் படத்திற்கான கதையை எழுதினேன். "மெஹே தகா தாரா" எனது எண்ணத்தை வெளிக்கொண்டது என்றே கூறுவேன்" என்று குறிபிட்டுள்ளார். இந்தியாவின் முக்கியமான இயக்குனராக கருதப்பட்ட கடக்கின் மிக முக்கியமான படங்களில் ஒன்று இந்த "மெஹே தகா தாரா"

No comments:

Post a Comment