Thursday, September 8, 2011

ரசனை மாற்றம்!


இது என் சொந்தக் கட்டுரை அல்ல. ஒளிப்பதிவாளர் திரு. செழியன் ஆனந்த விகடனில் எழுதிய உலக சினிமா தொடர், புத்தகமாக விகடன் பிரசுரம் வெளியிட்டது. உலகின் வெவ்வேறு நாடுகளில் எடுக்கப்படும் படங்களில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அதனை எழுத்துனடையாக விவரித்து அதில் எழுதியுள்ளார். ஒவ்வொரு பதிப்பிலும் 30 படங்களாக முதல் மற்றும் இரண்டாம் பதிப்பு 2010லும், இப்போது மூன்றாம் பதிப்பு 2011லும் வெளியாகி உள்ளது. உலக சினிமாக்களில் என் பார்வை திரும்பியது அந்த புத்தகங்களின் வாயிலால்தான். திரைப்படங்கள் மீது ஒரு தேர்ந்த ரசனை எனக்கு வருவதற்கும் இந்த புத்தகங்கள்தான் வழிவகுத்தன. அதற்கு செழியன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த புத்தகத்தில் அவர் "ரசனை மாற்றம்" என்ற தலைப்பின் கீழ் எழுதிய முன்னுரை பகுதியை இங்கே எழுதியுள்ளேன். இதை படிப்பவர்களுக்கு இந்த முன்னுரையே உலக சினிமாவின் மதிப்பை உணர்த்தும் என்றும், அதன் வாயிலாக அவர்களின் ரசனை மாறும் என்ற நம்பிக்கையோடும் எழுதுகிறேன்.

"ஒரு நல்ல திரைப்படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்?
திரைப்படம் என்பது, வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் அல்ல. அது நம்மை சிரிக்கவைக்கிற, அழவைக்கிற, சிந்திக்கவைக்கிற, உணர்வுகளை மிக நெருக்கமாக பரிமாறிக்கொள்கிற வலிமையான தொடர்பு சாதனமாகவும் இருக்கிறது. ஆனால், நாம் பார்க்கிற திரைப்படங்கள் என்ன விதமான உணர்வுகளுடன் நம்மை தொடர்புகொள்கின்றன?

குடும்பத்துடன் உணவுவிடுதிக்கு செல்கிறோம். அங்கு இருக்கும் எல்லா உணவையும் குழந்தைகளுக்கு நாம் அனுமதிப்பதில்லை. 'அவர்களுக்கு ஏற்றது எது?' என்பது நமக்கு முதலில் தெரியும் என்பதால், அங்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஒரு திரையரங்கத்துக்கு செல்கிறோம். அங்கு நடப்பது என்ன படம்? என்ன கதை?. திரையில் நடக்கிற வன்முறையையும், வயதுக்கு மீறிய காட்சிகளையும் குழந்தைகளுடன் பார்க்கிறோம். திரையரங்கை நாம் தவிர்த்தாலும் தொலைக்காட்சி இருக்கிறது. இணையம் இருக்கிறது. தவிர்க்கமுடியாமல், காட்சிகளாக நம்மைச்சுற்றி நிகழும் இந்த சாதனங்களில்
இருந்து தேவையானதை, சிறந்ததை நாம் தேர்வு செய்வது எப்படி?

சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து உணர துவங்கியிருக்கிற நாம், தினமும் காட்சி ரீதியாக மனதுக்குள் படித்துகொண்டிருக்கும் மாசு குறித்த விழிப்புணர்வை அடைந்து இருக்கிறோமா? தவறுதலாக நாம் எடுத்துக்கொள்ளும் மோசமான ஓர் உணவு, அதிகபட்சம் இரண்டு நாளுக்கு நமக்கு தொந்தரவாக இருக்கலாம். ஆனால், வெறும் பொழுதுபோக்குதானே என்று நினைத்து தொடர்ச்சியாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தவறான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மெது விஷம்(slow poison) போல முழு வாழ்க்கைக்குமான நம் இயல்பையே மாற்ற துவங்குகின்றன.

'இருட்டைப் பற்றி புலம்புவதைவிட ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள்' என்றொரு பழமொழி இருக்கிறது. தவறான படங்களை பற்றி வருந்துவதைவிட நல்ல படங்களை அறிமுகப்படுத்துவதே சிறந்தது. அந்த வகையில் உலகெங்கும் எடுக்கப்பட்ட நல்ல படங்களை தேடிப் பார்பதன் மூலம் மோசமான திரைப்படத்தை மட்டுமல்ல, நல்லவை என்ற போர்வையில் இருக்கும் போலிகளையும் நாம் அடையாளம் காணமுடியும். அதற்கு ஒரே வழி உலகின் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்துப் பார்பதுதான். அதன்மூலம் குடும்பத்திலும் நம் நண்பர்கள் மத்தியிலும் ஒரு மாற்று ரசனையை ஏற்படுத்த முடியும்.

சூழல் மாசுபடுவதை தடுக்க, மரம் வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல, காட்சி ரீதியாக மாசுபடுவதை தடுக்க, குறைந்தது இருபது சிறந்த உலகப்படங்களையவது நாம் பார்த்திருக்க வேண்டும். எளிமையான திரைப்பட நூலகத்தை வீட்டில் அமைப்பதன் மூலம், குழந்தை பருவத்திலேயே நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்துவைக்க வேண்டும். ஊருக்கொரு திரைப்பட சங்கத்தை ஏற்படுத்தலாம். திருமணங்களில், விழாக்களில் சிறந்த படங்களின் குறுந்தகடுகளை பரிசளிக்கலாம்.

'உணவு பழக்கத்திலிருந்து ஒழுக்க விதிகள் வரை எது சிறந்தது?' என்று கற்றுத்தருகிறது நமது கலாசாரம். ஆனால், அந்த கலாசாரத்தையே பாதிக்கிற திரைப்படத்தில் எது சிறந்தது என்று நாம் கற்றுக்கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது! அந்த வகையில் சிறந்த படங்களை அறிமுகப்படுத்தும் வழியாக, ரசனை மாற்றத்தை துவக்கிவைக்க இந்த நூல் உதவும் என்று நான் நம்புகிறேன். - அன்புடன் செழியன்."

No comments:

Post a Comment