Tuesday, July 19, 2011

நந்தலாலா - கல்லடி பட்ட மரம்

சமீபத்தில் வெளியான தெய்வதிருமகள் படத்தை முதல் நாளே சென்று பார்த்தேன். படம் வெளியாவதற்கு முன்பே அது "ஐ யம் சாம்"(i am sam) என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று தெரிந்துவிட்டது. படத்தை பார்க்கும்போதும் அது தெரிந்தது. நடிப்பு முதற்கொண்டு ஐ யம் சாம்மிலிருந்து தழுவபட்டாலும் விக்ரமின் நடிப்பு எனக்கு பிடித்தது. தமிழ் படத்திற்கான சில மாற்றங்களும், நாடகத்தனமும் தென்பட்டாலும் கதையின் கரு ஒன்றே என்பது அப்பட்டமாக தென்பட்டது. ஆனால் படத்திற்கு அமோக வரவேற்பு. வயிறு குலுங்க சிரித்தும், இறுதிகாட்சியில் அழுதும் ரசிகர்கள் படத்தை பார்த்ததை திரையரங்கில் காண முடிந்தது. அப்போது தான் ஒரு பிரபல, திறமையான, ரசிகர்களின் ஆதரவு இருக்கும் நடிகனை வைத்து எந்த மொழி படத்தை தழுவி தமிழில் எடுத்தாலும் படம் வெற்றி தான் என்று எனக்கு புரிந்தது...

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், கடந்த வருடம் ஒரு படம் வெளியாகி 14நாட்களில் தமிழ்நாட்டில் அத்தனை திரையரங்கிலும் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டது. இன்றுவரை ப்படி ஒரு படம் வந்ததாகவும் அதில் நடித்தது படத்தின் இயக்குனர் என்பதும் பல பேருக்கு தெரியாது என்பது கொடுமையான விஷயம். அந்த படத்தின் பெயர் "நந்தலாலா". படம் வெளியாவதற்கு முன்பே அது ஜப்பானிய படமான "கிகுஜிரோ" என்ற படத்தின் தழுவல் என கூறப்பட்டது. அப்போது ஆரம்பமானது படம் வெளியாகி அது திரையரங்கில் இருந்து வெளியேறும் வரை அதே புராணம். "அது காப்பி அடிச்ச படம் யா.. ஹீரோ வேற பாக்க நல்லவே இல்ல", "இவங்களுக்கெல்லாம் காப்பி அடிக்றத தவிர ஒன்னுமே தெரியாது" என்று இன்னும் பல பழந்தின்னு கொட்டை போட்டவர்களின் கருத்துகள். ஆனால் எத்தனையோ படங்களுக்கு மத்தியில் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று எனக்குள் ஒரு ஆர்வம். முதலில் "கிகுஜிரோ" டிவிடியை வாங்கி பார்த்தேன். ஒரு அமைதியான அழகான நடைபயணம் தான் படம். ரசித்து பார்த்தேன். இந்த படத்தின் தழுவல் தான் நந்தலாலா என்று கூறபட்டாலும், நந்தலாலாவில் விஷயம் கொஞ்சம் நிறைய இருக்கும் என்று கண்மூடித்தனமான நம்பிக்கை. அது ஏன்...? காரணம் அந்த படத்தின் இயக்குனர் மிஷ்கின்.

இயக்குனர் மிஷ்கின் தமிழில் தனியாக தெரியும் ஒரு படைப்பாளி. இவரின் முதல் படமான சித்திரம் பேசுதடி வெளிவரும்போது, நான் பள்ளிபடிப்பு முடித்திருந்தேன். வெட்டியாக இருந்ததால் என்னென்ன படங்களுக்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்று செய்திதாள்களில் போஸ்டர்களை பார்த்து கணித்து வந்தேன். அப்போது பெரிய படங்களுக்கு மத்தியில் அமைதியாக வெளியான இப்படம் நாட்கள் செல்ல செல்ல பிரபலமானது. ஒரு பக்கம் அந்த படத்தில் வந்த "வாளமீனுக்கும் வேலங்கமீனுகும்" என்ற பாடல் மட்டும் பிரபலமாக, இன்னொரு பக்கம் பிரபல இயக்குனர்கள் படத்தை பாராட்டி வந்ததும் தெரிய வந்தது. இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் மிஷ்கினுக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதியது படத்தின் போஸ்டரில் வந்ததை பார்த்தேன். "முதல் படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா, அப்போ படத்த பாத்தே ஆகணுமே" என்று ஆர்வம் அதிகரிக்க, உடனே சென்று படத்தை பார்த்தேன். ஒரு காதல் கதை என்ற போதும் திரைக்கதையும், கதாபத்திரங்களும் கச்சிதமாக கையாண்டிருந்ததை பார்த்து வியந்தேன். முதல் படத்தில் இத்தனை மெனக்கெடும் ஒரு இயக்குனர் என்ற விதத்தில் அப்போதே மிஷ்கின் மீது எனக்கு ஒரு தனி மரியாதை வந்துவிட்டது.

பின்பு
இவரின் இரண்டாவது படமான "அஞ்சாதே". நம்பிக்கையான இயக்குனரின் படம். எவரின் கருத்துக்கும் காத்திருக்காமல் படத்தை சென்று பார்த்தேன். முதல் படத்திற்கு நேர்மாறான விதம் . கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, பாத்திர வடிவமைப்பு என்று அத்தனையிலும் அவ்வளவு தெளிவு. ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகும் கதாபாத்திரம் என்றாலும் அது மனதில் நிற்கும் விதத்தில் கையாண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஒரு காட்சியில் ரோட்டில் அடிபட்டு கிடப்பவனை காப்பாற்ற நாயகன் உதவி தேடி பதறும் பொது, ஒரு பூ விற்கும் பாட்டி உதவி செய்யும். "அட போ பா.. அவன் யார்னு கூட தெரியாது. செத்து போய்ட்டான்.அவன தாங்கி பிடிச்சேன். . அதுக்கு எதுக்கு பா காசு. அந்த ஆளு சொல்றதுக்கெல்லாம் கவலை படாத..அவன் போலீஸ் இல்ல நீ தான் போலீஸ்" என்று சொல்லி, ரோட்டில் இறந்தவனின் ரத்த கரை படிந்த இடத்தில பூ தூவி விட்டு செல்லும். யோசித்து பார்த்தால் அந்த பாட்டிக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை. திரைக்கதை போகிற போக்கில் அந்த கதாபாத்திரத்தை திணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. னால் ஒரு காட்சிக்கு வந்தாலும் அந்த பாத்திரத்திற்கான அழுத்தத்தையும், நிறைவையும் கொடுத்திருப்பார் இயக்குனர். திரையரங்கில் கைத்தட்டலும், விசில் சத்தமும் காதை கிழித்தது இன்னும் மறக்க முடியாத தருணம். தயா, குருவி, லோகு என்று அவ்வொரு பாத்திரப்படைப்பும் அச்சு அசல். குறிப்பாக முகத்தை காட்டாத ஒரு மொட்டை கதாபாத்திரம் என்னை மெய்சிளிர்கவைத்தது. ஒளிப்பதிவின் நுணுக்கத்தை சொல்லவேண்டுமென்றால், ஒரு காட்சியின் கிருபா தயாவை வீட்டிற்குள் தங்கவைக்கும் போது, அவனது தங்கை வருகிறாள். பதட்டத்தில் தயா இருக்கும் அறையை பூட்டிவிட்டு, தங்கை வந்து போனதும், மீண்டும் அறையை திறப்பான். இந்த காட்சி முழுவதும் கால்களின் அசைவுகளை மட்டுமே முற்படுத்தி காட்டபட்டிருக்கும். ஒரு மனிதன் பதட்டமடையும்போது அவனது கால்கள் எப்படி செயல்படுகின்றன என்று அதில் சித்தரிக்கபட்டிருகும். இதற்கு முன் தமிழில் எந்த இயக்குனரேனும் திரைக்கதையை இந்த விதத்தில் கையாண்டிருகிறாரா என்பது அசாத்தியம் தான்.

இவரின் மூன்றாவது படம் தான் "நந்தலாலா". நவம்பர் 27 (படம் வெளியான அடுத்த நாள்), எனது பிறந்த நாளன்று சென்று படத்தை பார்த்தேன். நான் மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு. இந்த நிமிடம் வரை அந்த அனுபவத்தை மறக்க முடியவில்லை. தாயை தேடி செல்லும் இருவரின் பயணம். இசை பயணம் என்றும் கூட சொல்லலாம். ஏனென்றால் படம் முழுவதும் இளையராஜாவின் இசை நம்முடன் பயணம் செய்யும். இந்த படம் "கிகுஜிரோ"வை தழுவியது என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை மாற்று கருத்தானது. ஏனென்றால் இரண்டு பேரின் நடைப்பயணம் என்ற அந்த ஒற்றை வரியை தவிர எந்த விதத்திலும் இரண்டு படங்களையும் ஒப்பிட முடியாது. கதை, திரைக்கதை, கதாபாத்திரம் என்ற எந்த வகையிலும் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் சொல்லபோனால் கிகுஜிரோவை விட நந்தலாலாவில் சொல்லப்பட்ட விதமும் கருத்தாழமும் கொஞ்சம் அதிகம். நான் கவனித்த, ரசித்த சில இடங்கள் இங்கே.
1) மிஷ்கின் நடந்து போகும்போது கட்டிடத்தின் வெளியில் நிற்கும் ஒருவரிடம் "பசிக்குது" என்று கேட்பார். அதற்கு அவர் "பக்கத்து சந்துல கையேந்தி பவன் இருக்கு, போய் சாப்டு" என்பார். இருட்டாக இருப்பதால் அந்த குறுகிய சந்தை உற்று பார்த்துவிட்டு உள்ளே செல்லாமல் போய் விடுவார். சிறிது நேரம் அந்த இடத்திலேயே காட்சி நகராமல் இருக்கும். ஆனால் அதற்கான விடையை வேறொரு காட்சியில் கொடுத்திருப்பார். தன் தாயை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டு ஒரு இருட்டான குறிகிய சந்தில் நடந்து வெளியில் வந்ததும் வானத்தை உற்று பார்த்துவிட்டு செல்வார். தான் ஒரு மனநலம் பாதிகபட்டவனாக தாயின் மேல் கோபம் இருந்தபோது இருட்டின் மேல் பயம் இருந்தது. இப்போது தாயின் அன்பை உணர்ந்ததால் தனக்கு தெளிவு பிறந்தது என்பததை உணர்த்தும் விதத்தை அந்த காட்சி விவரிக்கும்.
2) தன் தாய் இருக்கும் வீட்டை நோக்கி கோபமாக செல்லும்போதும் ஒரு வீட்டின் வாயிற்கதவை பிடித்து தொங்கிவிட்டு பிறகு செல்வார். வீட்டிற்குள் சென்று "அவள வரசொல்லு..வெளிய வாடி..ஆஸ்பத்திரில எத்தன பேரு அடிச்சாங்க தெரியுமா டி..உன்ன அடிச்சா தெரியும்.." என்று சொல்லிகொண்டே சென்று ஓரத்தில் இருக்கும் ஒரு பெட்டிக்குள் இருந்து கூழாங்கற்களை எடுத்து அகி(சிறுவன்)யிடம் கொடுத்துவிட்டு செல்வார். அந்த கூழாங்கற்கள் அவர் சிறுவயதில் வீட்டில் இருந்த போது பெட்டிக்குள் போட்டு வைத்தது. மனதளவில் தன் பாலிய ஞாபகங்கள் இன்றும் இருப்பதை அந்த இடம் விவரிக்கும்.
3) ஒருமுறை வண்டியில் செல்கையில் அகியிடம் இருக்கும் தன் அம்மாவின் புகைப்படம் காற்றில் கைநழுவி ஒரு முள்வேலியில் சிக்கிக்கொள்ளும். அதை எடுக்கவேண்டும் என்று வண்டியை நிறுத்தி எடுக்கசொல்லி அழுவான். முடிவில் தன் தாய்க்கு இன்னொரு குடும்பம் இருப்பதை பார்த்து அதிர்ந்ததும் அவனை அறியாமல் அந்த புகைப்படம் காற்றில் கைநழுவி பறந்து அதே முள்வேலியில் சிக்கிக்கொள்ளும். தன் தாய் மீது வைத்திருந்த அன்பு அவனிடத்தில் இல்லாமல் போவதை அந்த இடம் வசனங்கள் இல்லாமல் இசையுடன் காட்சி வாயிலாக மட்டுமே விவரிக்கும்.
4) தாயன்பு என்ற ஒரு புள்ளியை சுற்றியே கதை நகர்வதால் அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களை தாயன்பும், தாயின் மேல் இருக்கும் கோபத்தையும் வெளிக்காட்டுவதாகவே சித்தரிக்கபட்டிருகும். குறிப்பாக சொன்னால், வீட்டிற்கு வெளியில் ஒரு குழந்தை அழுவதை பார்த்து அகி ஓடிச்சென்று பார்ப்பான். "உன் அம்மா எங்க பாப்பா" என்று கேட்கும் வேலையில் அந்த குழந்தையின் அம்மா வந்து "செல்லம்..அம்மா வந்துட்டேன்ல .. அழாத..அழகூடாது" என்று சொல்லி குழந்தையை தூக்கிகொண்டு செல்வாள். அப்போது, தன் அம்மா அவனுடன் இல்லை என்ற அகியின் ஏக்கத்தை நாம்மால் உணர முடியும்.
ஒரு ஊனமுற்றவனை மிஷ்கின் நொண்டி என்று சொன்னதும் கோபத்தில் "நா நொண்டி தான் டா.. என்ன பெத்து போட்டுட்டு போயிட்டாள்ல..அவள சொல்லணும்..நா வயித்துலேர்ந்து வெளிய வந்ததும் செத்து போயிட்டாள்ல..நா வயித்துல இருக்கும்போதே செத்து போயிருக்கலாம்ல அவ.." என்று தாயின்மீதுள்ள கோபத்தை வெளிக்கொண்டு அழுவான்.
வீட்டு முகவரியை கேட்க அகி ஒரு வீட்டுகதவை தட்டுவான். கதவைத்திறந்து "யார் வேணும்" என்று ஒரு பெண் கேட்கும். அப்போது உள்ளிருந்து "இந்திரா" என்று குரல் கேட்கும். "இருமா..ஏன்மா கத்திட்டே இருக்க..சனியன்.. எப்போதா தொலையுமோ" என்று முணுமுணுத்துவிட்டு அகியிடம் பேசும். இப்படி ஒவ்வொரு விதத்தில்
மனிதர்கள் தாயன்பை எப்படி கையாளுகிறார்கள் என்பது விளக்கபட்டிருகும். இன்னும் படத்தில் சுவாரஸ்யமான இடங்கள் நிறைய உண்டு. ஆனால் கிகுஜிரோவில் இது போன்ற நுனுகங்களையும், ஆழத்தையும் என்னால் உணர முடியவில்லை. தனது முந்தைய படங்களை போல இந்த படத்திற்கும் பாராட்டும் மதிப்பும் கிடைத்தது மிஷ்கினுக்கு. ஆனாலும் இது மக்களிடம் முழுமையாக சென்றடையும் முன்பே அதை வெளியேற்றியது தான் இன்றுவரை என்னக்குள் கோபத்தை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலும் மிஷ்கின் மீது சாட்டப்பட்ட குற்றம் படத்தின் எழுத்து -இயக்கம் என்ற இடத்தில தன்னுடைய பெயரை போட்டதும், மூலக்கதை டகேஷி கிட்டானோ(Takeshi Kitano) என்பதை குறிப்பிடவில்லை என்பதும் தான். எனக்குள்ளும் அந்த உறுத்தல் இருந்தது. ஆனால் விஜய் டிவியில் அவர் பேசியபோது வெளிப்படையாக கூறிய சில விஷயங்கள் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்த்தியது. தான் தமிழில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதும், பெரும்பாலும் சினிமாவை கற்று கொண்டது அகிரா குரோசவா(Akira Kurosawa) மற்றும் டகேஷி கிடனோ(Takeshi Kitano) விடம் இருந்துதான். அவர்களுடைய படங்களின் நுணுக்கங்கள், வடிவமைப்பு போன்றவையே தான் சினிமாவை கற்றுக்கொள்ள உத்வேகமாக இருந்தது என்று கூறினார். காப்பி அடிக்கும் ஒரு இயக்குனர் இப்படி வெளிப்படையாக அவர்களின் பெயரை குறிப்பிடுவாரா? அப்படியென்றால் போஸ்டரை வைத்தே தெய்வதிருமகள் ஐ யம் சாம்(Iam Sam)மிலிருந்து எடுக்க பட்டது என்பது தெரியும்போது, இயக்குனர் விஜய் இன்னும் இது தன்னுடைய சொந்த படைப்பு என்று கூறுவதை ஏற்று கொள்ள முடிகிறதா?

நந்தலாலாவில் தொடக்கத்தில் பெயர் பட்டியல் இடுகையில் ஒரு நீரோடை ஓடுவதை காணலாம். அகிரா குரோசவாவின் ட்ரீம்ஸ்(1990) படத்தில் இறுதியில் பெயர் பட்டியல் இடுகையில் அதே போன்ற நீரோடையை காணலாம். இதையும் காப்பி என்று கூற முடியுமா? காப்பி அடிக்க முழு படமும் இருக்கும்போது இந்த வடிவத்தை எடுப்பார்களா? தான் ரசித்த ஒரு விஷயத்தை தன்னுடைய படைப்பில் காட்டும்போது அதை காப்பி என்று ஒரே வார்த்தையால் ஓரங்கட்டுவதா? சமீபத்தில் வெளியான மிஷ்கினின் "யுத்தம் செய்"யில் அகிரா குரோசவாவின் ரேஷாமன் படத்தை குறிப்பிடுவதை காணலாம். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் அவர் ரசித்த விதத்தை உணர்த்தி இருப்பார். ஆனால் நம் மக்களை பொறுத்தவரை இது காப்பி.

காப்பி என்று முண்டியடித்து நிற்கும் இவர்கள் இதற்கு முன் வந்த எத்தனை படங்களை இப்படி எதிர்த்தார்கள்? காட்பாதர்(Godfather) இல்லாமல் ஒரு நாயகனும், மிஸ்ஸஸ் டவுட் பையர்(Mrs. Doubt Fire) இல்லாமல் ஒரு அவ்வை ஷண்முகியும், பைசைக்கிள் தீவ்ஸ்(Bicycle thieves) இல்லாமல் ஒரு பொல்லாதவனும், மெமெண்டோ(Memento) இல்லாமல் ஒரு கஜினியும், ஸ்டேட் ஆப் ப்ளே(State of Play) இல்லாமல் ஒரு "கோ"வும் இவர்களுக்கு கிடைத்திருக்குமா. அயன் படத்தில் வயிற்றுக்குள் போதை பொருள் கடத்தும் நுணுக்கத்தை மரியா புல் ஆப் கிரேஸ்(Maria full of grace) என்ற ஸ்பானிஷ் படத்தில் ஆச்சு அசலாக பார்க்கலாம். கௌதம் மேனன் எடுத்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் திரைக்கதை டெரெய்ல்ட்(Derailed) என்ற ஆங்கில படத்தில் அப்படியே இருக்கும். இதையெல்லாம் எதிர்த்தார்களா அல்லது இந்த படங்களை காப்பி என்ற பெயரில் ஓரங்கட்டினர்களா? இவ்வளவு ஏன்.. "அதிக பொருட்செலவில் எடுத்து அதிக வசூல் குவித்து உலகெங்கும் மெகா ஹிட்டான ஒரு தமிழ் படம்" என்று இன்றுவரை தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் எந்திரன், ஐரோபோட் (iRobot), பைசென்ட்டேன்னியால் மேன்(Bicentennial Man) இல்லாமல் வந்திருக்குமா? ஒரு பிரபல நடிகர் நடித்தால் அது கார்டூனிளிருந்து காப்பி அடித்தாலும் வெற்றிதானா? சற்றும் வாய்கூசாமல் தனது கனவுபடம்(Dream Project) என்று இன்றுவரை சொல்லிகொள்ளும் ஷங்கரை விட நேர்மையாக, வெளிபடையாக இருக்கும் மிஷ்கின் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை.

பணம், பொருட்செலவை மட்டும் முன்னோக்காக கொண்டு , அதிக லாபம் ஈட்டுவதில் மட்டும் குறியாக இருக்கும் ஷங்கர், விஜய் போன்ற இயக்குனர்களுக்கு மத்தியில் மனித உணர்வுகளை கருவாக கொண்டு மக்களுக்காக படம் எடுக்கும் மிஷ்கின் போன்ற கலைஞர்களை வரவேற்க தவறுகிறார்கள் என்பதே என் ஆதங்கம். புரிந்து கொள்ளும் காலம் வரும். காத்திருப்போம்.

1 comment:

  1. miga arumaiyaana pathivu.... Naanum Nandalala padathukku neraya vimarsanam, karuthu padichi irruken, but they are not something like it. I like this one.

    ReplyDelete